அர்ஜென்டினாவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து போட்டி வன்முறையில் முடிந்து, 3 பேர் உயிரிழந்ததும், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள லிபர்டாடோர்ஸ் டி அமெரிக்கா மைதானத்தில் நடந்த கோபா சூடாமெரிக்கானா கிளப் போட்டியில், அர்ஜென்டினா மற்றும் சிலி அணிகள் மோதியபோது ரசிகர்களிடையே திடீர் கலவரம் வெடித்தது. சிலி அணியின் ரசிகர்கள் கற்கள், குச்சிகள், பாட்டில்கள், இருக்கைகள் போன்றவற்றை வீச ஆரம்பித்தனர். இதற்குப் பதிலடியாக, அர்ஜென்டினா ரசிகர்கள் எதிரணி ரசிகர்களை தாக்கியதோடு, சிலரது ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை உச்சத்துக்கு சென்றதால், சிலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேலரியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றார். மோதலின் போது 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அதில் சிலருக்கு கத்திக்குத்து காயங்களும் ஏற்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, 3 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தையடுத்து, போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் நிர்வாகக் குழுவினரால் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
..