காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையே நடந்த கடும் சண்டையில், குறைந்தது 52 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிழக்கு காங்கோவில் நீண்ட நாட்களாகவே M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் காங்கோ அரசுப் படைகளுக்கு இடையே மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. சமீபத்திய தாக்குதலில், 8 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பலர் அப்பாவி கிராமப்புற மக்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.M23 கிளர்ச்சியாளர்கள் பெரும்பாலும் டுட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிழக்கு காங்கோவில் நிலப்பகுதிகளை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். இயற்கை வளங்களால் செழித்து இருக்கும் கிழக்கு பகுதியை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கோ அரசாங்கம், M23 கிளர்ச்சியாளர்களுக்கு ருவாண்டா அரசாங்கம் ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது. இதுவே மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கனிம வளங்கள் நிறைந்த காங்கோவின் கிழக்கு பகுதி பல குழுக்களின் சண்டையால் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தாக்குதல்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் கோமா போன்ற முக்கிய நகரங்களையும் கைப்பற்றியதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகங்கள், காங்கோவில் நிகழும் வன்முறைகளுக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன. பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
..