தங்களுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனைக்கான பொதுவான கரன்சியாக உள்ள டாலரை மாற்றினால், இந்தியா உட்பட, 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள ஒன்பது நாடுகளுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா அடங்கியது பிரிக்ஸ் அமைப்பு. பிரிக்ஸ் அமைப்புக்கென தனியாக பொதுவான கரன்சி உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது. குறிப்பாக, ரஷ்யா, சீனா ஆகியவை இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், டாலருக்கு பதிலாக மாற்று கரன்சியை பயன்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை இந்தியா முன்வைத்துள்ளது. பரிவர்த்தனைக்கான கரன்சியை மாற்றும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை. டாலருக்கு மாற்றாக வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று அவர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், 100 சதவீத வரியை அவர்கள் சந்திக்க நேரிடும். இதன்பின், அமெரிக்காவுடன் தொழில், வர்த்தகம் செய்ய முடியாது. அமெரிக்க பொருளாதாரத்தில் அந்த நாடுகள் இனி பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். டாலர் பயன்பாட்டை தவிர்க்கும் எந்த ஒரு நாட்டுக்கும் இந்த, 100 சதவீத வரி முறை பொருந்தும்.
..