இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய 'தாயுமானவர்' திட்டம் மக்கள் நலனில் முன்னேறும் தமிழக அரசு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை வீடுகளுக்கே கொண்டு செல்லும் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய முயற்சியை இன்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” என்ற புதிய திட்டத்தை சென்னை நகரில் இன்று (ஆகஸ்ட் 12) அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். திட்டத்தின் நோக்கம்; 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வாங்குவது பெரும் சிரமமாக இருப்பதை கருத்தில் கொண்டு, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் மாதம்இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வாசலிலேயே ரேஷன் பொருட்களைப் பெறுவார்கள். எவ்வாறு செயல்படும்? தமிழகத்தின் சுமார் 35,000 நியாய விலைக் கடைகள் மூலம், 70 வயதுக்கும் மேற்பட்ட 20 லட்சம் முதியோர் சுமார் 1,27,000 மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் நேரடியாக வீடுகளில் ரேஷன் பொருட்களைப் பெறுவார்கள். இதன் கீழ் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். சமூகப் பயன்; இந்தத் திட்டம், முதியோருக்கும் உடல் நலக்குறைவு காரணமாக வெளியே செல்ல முடியாதவர்களுக்கும் மிகப்பெரும் ஆதரவாக இருக்கும். அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே வழங்குவதன் மூலம், அவர்களின் உடல் உழைப்பும், செலவும் குறைக்கப்படுகிறது. மேலும், சமூகப் பாதுகாப்பும், மரியாதையும் உறுதிசெய்யப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, “தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் நலனும் எங்கள் கடமையும் பொறுப்பும்” என்று தெரிவித்துள்ளார்.
..